Mar 22, 2012

தட்டாமலே திறந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டுக் கதவு.புலமைப்பித்தன்


என் கண்ணிலே கனவாகவும், நெஞ்சிலே நினைவாகவும், ஒரு கணமும் நீங்காமல் நிறைந்திருக்கும் என் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்டியிலே பிறந்தார். 

என் உள்ளத்தில் நுழைந்து  உயிரிலே கலந்து நீக்கமற நிறைந்திருக்கும் ஒருவன்; அவன் பேரைச் சொன்னால் உலகமே அதிர்ந்து போகும் பேராண்மை மிக்கவன்  என் தம்பி பிரபாகரன் வல்வெட்டித் துறையிலே பிறந்தான். 

அந்த மாமனிதன் வடகடலில் இட்ட ஒரு நுகம்; அதன் துளையில் தென்கடல் இட்ட கழி சென்று கோத்ததுபோல தம்பி. சென்னையில் கண்டார்கள் பேரன்பும் நட்பும் கொண்டார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் இடையிலான நட்பும், உள்ளம் கலந்த உறவும், தனி மனிதர்களுக்கான நட்பும் உறவும் அன்று! அது ஒரு தத்துவத்தின் அடிப்படையிலான நட்பு; உறவு.  

அடிமைச் சகதியில் அமிழ்ந்து கிடக்கும் ஒரு சமுதாயத்தை  உலகம் முழுவதும் விடிந்தாலும் தங்களுக்கு விடிவே இல்லாமல் தவித்துக் கிடந்த தமிழ் இனத்தின் மீட்சிக்காக  விடுதலைக்காக உருவான நட்பு. உன்னதமான உறவு.

இரண்டு புரட்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பொருத்தமான நட்பு. ஈழப்போராளிகள் என்று எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் வலம் வந்தார்கள். அத்தனை பேரும் என் வீடு தேடி வந்தவர்கள்தாம். எந்தப் போராளி இயக்கத் தலைவர்களையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. 

தமிழ் ஈழ விடுதலையை மீட்டெடுக்கப் போகும் பெரும் தளகர்த்தர் தம்பி மட்டும்தான் என்பதிலே அழுத்தமான  உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார். தட்டுங்கள்   திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்என்கிறார்களே... அதற்கு  ஒருபடி மேலே போய்த் தம்பிக்காக, தட்டாமலே திறந்த கதவு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டுக் கதவு. கேட்காமலேயே கொடுத்த கரம், அந்த வள்ளலின் வாரி வாரிக் கொடுத்துப் பழக்கப்பட்டுப்போன கரம். 

சுதந்தரம் என்பது யாரிடம் இருந்தும் யாரும் வாங்குவது அல்ல; ரத்தத்தின் விலையாக மீட்டெடுப்பது. கத்தியின்றி ரத்தமின்றிப் பெற்ற சுதந்தரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. விலைகொடுத்து வாங்காத எதுவும் மரியாதைக்குரிய பொருள் அல்ல. சுதந்தரம் ஒன்றும் இலவச வேட்டி சேலை போல யாரோ கொடுக்க யாரோ வாங்கிக் கொள்வதல்ல. 

நான் தம்பிக்கு அடுத்தபடியாக மதிக்கின்ற  மரியாதை வைத்திருக்கிற போராளி சேகுவேராதான். அவர் கியூபாவை விட்டு வெளியேறும்போது தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில்; சுதந்தரத்துக்காகப் போராடும் மக்களுக்கு ஒரே வழி; ஆயுதப் போராட்டம்தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த நம்பிக்கையில்தான் நடக்கிறேன். சிலர் என்னை சாகசக்காரர் என்று அழைக்கலாம்! நான் சாகசக்காரன்தான். ஆனால் ஒரு வித்தியாசம்! தன்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கைகளை நிரூபிப்பதற்காகத் தன்னையே அர்ப்பணம் செய்துகொள்ளத் தயங்காத சாகசக்காரர் என்கிறார் போராளி சேகுவேரா.

 தம்பியும், தன் மண்ணையும் மக்களையும் மீட்க, தன்னையே அர்ப்பணம் செய்துகொள்ளத் தயங்காத சாகசக்காரன்தான். அந்த மாவீரனின் சாகசத்தில் மக்கள் திலகம் மாறாத நம்பிக்கை வைத்திருந்தார். நான் உனக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன். ஆயுதங்கள் வாங்கிக் குவி. விடுதலைப் போரில் நின்று வெற்றிகளைக் குவி. உன்னால் மட்டும்தான் தமிழீழம் விடுதலை பெறும். தட்டிக் கொடுத்தார் தாவி அணைத்துக் கொண்டார். கோடானுகோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தார். 

ஒருநாள் தம்பியிடம், ‘‘ஆயுதப்-புரட்சியின் மூலம் ஈழ விடுதலையை மீட்டெடுக்க எவ்வளவு தேவைப்படும்?’ என்றார் புரட்சித் தலைவர். தம்பி, ‘நூறு கோடிஎன்றார். அதை நான்  தருகிறேன்என்றார் புரட்சித் தலைவர்.

என் தலைவன் கொட்டிக் கொடுத்த செல்வம், அடிமைச் சிறையில் கிடக்கும் ஒரு தேசத்தை மீட்க ஆயுதங்களாகிப் பயன்பட்டது. என் தலைவனுக்கு நிகரான மாமனிதன் இல்லை
நன்றி: புலமைப்பித்தன் (தமிழக அரசியல்)

1 comment:

சத்தியா said...

நிச்சயமாய் அந்த புனிதருக்கு நிகர் யாருமேயில்லை. துன்பப்படுபவர் கண்ணீர் துடைத்த கை. அந்த மாமனிதர் இன்றிருந்திருந்தால் தமிழீழம் மெய்பட்டிருக்கும்.